Advertisement

போலி நிலைப்பாடுகளுக்கு என்னுடைய கலையுலகில் இடமில்லை - விசேட நேர்காணல் கலாநிதி சுபாஷினி பத்மநாதன்

 

போலி நிலைப்பாடுகளுக்கு  என்னுடைய கலையுலகில் இடமில்லை - விசேட நேர்காணல் கலாநிதி சுபாஷினி பத்மநாதன்


ஒருவரையும்  தாக்காத என்னுடைய தனிப் பயணத்தில்  செயற்பட்டு வருகின்ற நடன தாரகை  நாட்டிய கலாசிகாமணி  கலாநிதி  சுபாஷினி பத்மநாதன்.  தனது  நாட்டியக் கலையை இரண்டரை வயதில்  யாழ்ப்பாணத்தில்  கலாபூஷனம் திருமதி. திரிபுர சுந்தரி யோகாநந்தம் அவர்களிடம் ஆரம்பித்து  பின்    புகழ் பெற்ற காலஞ்சென்ற   பத்மஶ்ரீ இராமையா பிள்ளையிடம்   முறையாக பரதத்தினைக் கற்று தேர்ச்சி பெற்றார். தனது  ஆரம்பக் கல்வியினை யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும்  பின்பு  வட இந்தியாவின்  சண்டிகார் பெண்கள்  அரசினர்  உயர்நிலை    கல்லூரியிலும்  மேற்கொண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்  கலைமாணி முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

 

தமிழ், ஆங்கிலம்  ஆகிய இரு  மொழிகளிலும்  சிறந்த  ஆக்கப்பூர்வமான கலைதுறைசார் பல கட்டுரை நூல்களையும்  இது வரையில்  பரதம் தொடர்பில் 19 நூல்களையும்  எழுதி வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி  1991 ஆம் ஆண்டு சிறந்த பத்திரிகை  எழுத்தாளருக்காக 'எஸ்மண்ட் விக்கிரமசிங்க' விருதினையும் பெற்றுள்ளார்.  சென்னை  வழுவூரார் பரத நாட்டிய கலாசார கேந்திரத்தில் டிப்ளோமா  பட்டத்தைப் பெற்றுக் கொண்டதோடு,                                                                                                                                                           

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  பரதநாட்டியத் துறையில் டிப்ளோமா   பட்டம் , முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து  தந்தையின்  இறுதி ஆசைக்காக கலாநிதி அவர் இறப்பதற்கு  மூன்று  நாட்களுக்கு முன்பு  கொழும்பு  பல்கலைக்கழகத்தில்   பெற்றுக் கொண்டுள்ளார்.  இலங்கையிலிருந்து  பரத நாட்டியத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது  நாட்டியத் தாரகை  என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டள்ளார்..  1998 ஆம் ஆண்டு கொழும்பு  இந்திய கலாச்சார  நிலையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து  இன்று  வரை நடன  வகுப்புகளை நடத்தி வருகின்றார்.

 

1.     கொரோனா தொற்று பரவலின் பின்னர் பரதநாட்டியத்தில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ?

              கொரோனா தொற்று காரணமாக பரதநாட்டியத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள என்று  தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்னர் மேடைகளில் மாத்திரம் தான் நாட்டிய நிகழ்வுகள்  அரங்கேற்றப்பட்டு வந்தன. ஆனால் இந்த கொரோனா தொற்றின் பின்னர் கலை உலகில் பல வித்தியாசமான முறைகளை கையாள  வேண்டிய நிலை ஏற்பட்டது.  தொலைநோக்கியல் ரீதியில் பலவிதமான முறையில்  கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  இது பரதநாட்டியத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு திருப்பு முறையாகவே நான் பார்க்கின்றேன்.  அத்துடன் கொரோனா தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளினால் இலங்கையில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கிய சவால்களின் முக்கியமானது மொழி புலமை.  தற்போதைய நவீன காலத்தில் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் நேரடியான கற்கை நெறிகளுக்கு  சமாந்தரமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப ரீதியாகவும் கலைத்துவத்தை வளர்க்க வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.  ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாட்டில் ஆங்கில புலமை குறைவாக இருப்பதினால் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை  மேற்கொள்வது  சற்று கடினமானது . கொரோனா பரவல் உலகளாவிய ரீதியில் பல அழிவுகளை ஏற்படுத்தினாலும் கலையு லகை  பொருத்தவரையில் பல புத்தாக்க செயற்பாடுகளில் எம்மை ஈடுபட செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

 

2.     நீங்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றீர்கள் இந்த நிலையில் நேரடியாக முறையில் பரதத்தை  கற்பிப்பதற்கும் இணைய வழி மூலம் கற்பிப்பதற்கு இடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா?

 

நிச்சயமாக நிறைவே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் போது மாணவர்களை நாங்கள் நேரடியாக சந்திப்பதில்லை.  எமக்கு இருக்கின்ற அறிவியல் ஆற்றலின்  அடிப்படை ஆழமாக இருந்தால் மாத்திரம் தான் இணைய வழியில் படிப்பிக்கலாம். அத்துடன் எமது நாட்டில் ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. எமது வகுப்புகளை மற்றொரு விரிவுரையாளர்கள் நடத்தலாம் ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது எமக்கென்று இருக்கும் தனித்துவத்தை நாங்கள் தான் வெளி காட்ட வேண்டும் செயன்முறையை விரிவுரையாளர்கள் தான் செய்து காட்ட வேண்டும் என்பதில்  என்பதில் ஆணித்தளமாக இருப்பார்கள்.

 

03. பரதநாட்டியத்தில் தட்டுக்களி மற்றும் நட்டுவாங்கம்  அவற்றின் பாவனை எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றன?

 

 அதாவது ஒரு நடன நிகழ்வை எடுத்துக் கொண்டால் அந்த நடனத்தை லயத்துக்கு ஏற்ப கொண்டு செல்வது நட்டுவாணரின் கடமை . ஒரு உருப்படியை மெருகூட்டுவது நட்டுவாணரின் தாளக்கட்டிலே தங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து நட்டு வாங்கம்  என்பது சிவபெருமானின் பஞ்சமுகங்கள் ஒரு பிள்ளை இதனை உடனே உடனடியாக படித்து படித்து விட முடியாது. தன்னை முழுமையாக கலைத்துறைக்கு அர்ப்பணித்ததன் பின்னரே நட்டு வாங்கத்தின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.  பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு  நட்டுவானராக இருக்க வேண்டும் என்றால் நாட்டியத்தை பல கோணங்களிலும் பயின்று இருந்தால் மாத்திரமே முடியும்.  அதேபோல்   தட்டுக்களி  என்பது ஒரு நடன மாணவியை மனோலாயப்படுத்தி சமநிலைப்படுத்துவதற்கு தேவைப்படுகின்றது.  தட்டுக்களியை ஒரு நடனமாது படிக்கும்போதே உபயோகிக்கலாம். மாணவர்களை கட்டுப்படுத்துவதாக இது அமைகின்றது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான இருப்பினாலே கலைகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தட்டுகளி மிகவும் முக்கியத்துவத்தை பெறுகின்றது.



 

04. பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் ஊடகங்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன?

 

 இந்த துறையில் ஒவ்வொருவரும் கையாளும் முறைமையை தான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன.  என்னை  பொருத்தவரையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு வகைகளிலும் உதவிகளை செய்து வருகின்றன. ஒரு நாட்டிய கலைஞன் தனக்கான களத்தை உருவாக்கிக் கொள்வதற்கு உறுதுணையாக இருப்பது ஊடகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட  கலைத்துறையில் பல ஊழல் செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஒரு கருவியாக இருக்கின்றது. கொரோனா தொற்று காலத்தில் இது அனைவராலும் உணரப்பட்ட ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

 

05. தமிழ் மாணவர்களை தாண்டி சகோதர மொழி மாணவர்களுக்கும் பரத கலையை கற்பித்து வருகின்றீர்கள் இது தொடர்பில் உங்கள் கருத்து?

 ஆம் சிங்கள மாணவர்கள் மிகவும் விரும்பி படிக்கின்றார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தின் பின்னர் தன்னுடைய மொழிக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அதிலும் சிலர் பொருளாதார இயக்கத்திற்காக இதை படித்து வருகின்றார்கள். சிறு சிறு கிராமங்களுக்கு சென்று தங்களுக்கு ஏற்றார் போல் பரதத்தை மாற்றுவது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.  ஆனால் இவ்வாறான விடயங்கள் அனைவராலும் செய்யப்பட்டு வருகின்றது என்று நான் சொல்ல மாட்டேன் ஆனால் சிலரால் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது. இது பரத நாட்டியத்துறைக்கு  ஏற்பட்ட பாரிய சவாலான விடயமான அமைந்துள்ளது என்பது  எனது  தனிப்பட்ட கருத்து.

 

06. பரதத்தின் வருகையின் பின்னர் கிராமிய கலைகள் நளிவடைந்ததாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன இது தொடர்பில் உங்கள் கருத்து ?

 

நளிவடையவில்லை ,ஆரம்ப காலம் தொட்டே இந்த கிராமிய கலைகளை ஒரு பிழைப்பாக மேற்கொண்டவர்கள் காலப்போக்கில்  வருமானம் பற்றாமல் போக முழுமையாக இந்த கலையை கைவிட்டுள்ளனர்.  பரதநாட்டியம் என்பது ஒரு தனித்துவமாக மெருகூட்டப்பட்டு ஒரு கலை வடிவத்தை  பெற்றுள்ளது. பரதம் பல ஒப்பனை ஆடி அலங்காரம் என்பவற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.  இதனால் இளம்  தலைமுறையினர் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர் . கிராமிய கலைகளில் மெரு கூட்டப்பட்ட தன்மை கிடையாது.  இதை தான் நாட்டிய சாஸ்திரம் தேசி மார்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது. தேசி என்பது பிரதேசத்தை சேர்ந்த கலையம்சம் ஆனால் மார்க்கம் என்பது உலகளாவிய ரீதியில் ஆடப்படும் ஒரு கலை. இதனாலே பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடும் கிராமிய கலைகள் தற்போது சற்று குறைவடைந்து காணப்படுகின்றன.

 

07.  பரதத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இறைவனை அடைவதற்கான சிறந்ததோர் வழி வழியாக கலை ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. தற்போதைய  கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த கலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன.  எதற்காக பரதத்தை கற்கின்றோம் என்ற நியதிகள் இல்லாமையே பரதத்தை ஆடுபவர்கள் எம்மில் அதிகமாகவே உள்ளனர். அது மட்டுமல்ல அரங்கேற்றம் முடித்துள்ளோம் என்று கூறுவதில் சிலர் தமது அந்தஸ்தை வெளிப்படுத்த எண்ணுகின்றார்கள். ஒரு பிள்ளை படித்த்தை சபைக்கு எடுத்தியம்புதலேயே அரங்கேற்றம் ஆகும். இந்த புனிதமான கலையை ஆடம்பரமாக மாற்ற நினைப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

08. இறுதியாக நடனம் பயில விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

 கலையை உணர்ந்து படிக்க வேண்டும் பரதத்தின் ஆரம்பகட்ட நிலைப்பாடுகள் அழிந்து போகும் நிலையில் தற்போது  இருக்கின்றன. அவற்றை நேர்த்தியான முறையில் கட்டி எழுப்ப வேண்டியது எமது கடமை. அதனை விட தற்போதைய நவீன காலத்தில் மொழிப்புலமை மிகவும் முக்கியம். தொழில்நுட்ப ரீதியில் கலைத்துவத்தை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றோம். எதிர்கால தலைமுறை நிச்சயமாக தமது ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கலை என்பது ஒரு பகுதி அதனுடன் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஆங்கில புலமை என்பது மற்றும் ஒரு பகுதி இவை மூன்றும் சேர்ந்தால் மாத்திரம் தான் வெளி உலகத்திற்கு எமது கலை நிலைப்பாடுகளை தோற்றுவிக்கலாம். காலத்தின் தேவை அறிந்து செயல்பட வேண்டும். தற்போது எல்லா விதத்திலும் எல்லா விடயங்களிலும் மோசடிகள் இடம் பெறுகின்றன. இந்த  விடயத்தில் தற்போதைய மாணவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். மாற்றங்கள் மரபை வளப்படுத்த வேண்டுமே தவிர முறையாக மாற்றி விடக்கூடாது எங்களை மாற்றி சரியான வடிவில் நாங்கள் நடத்தினால் மாத்திரம் தான் கலையை வளர்க்க முடியும்.

 

எந்த ஒரு கலையும் தோன்றிய காலத்தில் இருப்பது போன்று அப்படியே இருப்பதில்லை .காலத்தால் புதுப்புது மாற்றங்களை காணவே முடிகின்றது . இந்த மாற்றங்கள் மரபை வளப்படுத்த வேண்டுமே தவிர முழுமையாக மாற்றி விடக்கூடாது. கலை வாழ்க்கை என்பது  எங்களுக்கு பின்னால் வரும் சந்ததிக்கு நாம் கொடுக்கும் சொத்து என்பதை உணர்ந்து செயல்படுவதே கலைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணி என நம்புகின்றேன். என் வாழ்க்கை முழுவதையும் இத்துறைக்கு அர்ப்பணிப்பேன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 


யதுஷா ரவித்தியாகராஜா



படப்பிடிப்பு - அகிலேஷ்

Post a Comment

0 Comments